Tuesday, 21 August 2007

கற்றுக் கொடுத்த அப்பா


நடை வண்டியில் நடைபயில கற்றுக் கொடுக்கையில்,
விழாமல் இருக்க அப்பாவின் கரம் அருகிலேயே

மூன்று சக்கர சைக்கிளில் தள்ளி விட்டுக் கொண்டே
பின்னால் நடந்து வரும் அப்பாவின் கால்கள்

இரு சக்கர சைக்கிள் பழகிக் கொடுக்க,
பின்னால் மூச்சிரைக்க ஓடி வரும் அப்பா

TVS-50 ஓட்டப் பழகும் போது தூரத்திலிருந்தே
கவனிக்கும் அப்பாவின் பயம் கலந்த பாசப் பார்வை

இன்று, பக்கத்து இருக்கையில் பெருமிதத்துடன் அப்பா
நான் காரில் அவரை ஏற்றிக் கொன்டு செல்கையில்

Tuesday, 14 August 2007

அறுபது ஆண்டு சுதந்திரம்

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம்
எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே.

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே!

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே.
--பாரதி

Monday, 13 August 2007

நீ சொல்லும் வரை.......


மாமா மகனுக்கு கல்யாணம், பத்திரிக்கை கொடுத்து விட்டுக் கேட்டான்,
உங்களுக்கு எப்போது என்று!

பக்கத்து வீட்டுப் பையனின் திருமண ஆல்பத்தை பார்க்கும் போது கேட்டான்,
உங்களை இப்படி எப்போது பார்ப்பது என்று!

உடன் வேலை பார்க்கும் தோழி, மாப்பிள்ளையின் புகைபடத்தை காட்டி விட்டு கேட்டாள், உங்களவரை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று!

அண்ணி குழந்தைக்கு விளையாட்டு காட்டி சோறூட்டும் போது கேட்டாள்,
எப்போது என் மகனுக்கு பெண் பிள்ளை பெற்று தர போகிறீர்கள் என்று!

அக்கா மகனை தூங்க வைக்கும் போது, உன் பிள்ளையின் தொட்டிலை எப்போது ஆட்ட போகிறாய் என்றார் அக்காவின் கணவர்!

அமெரிக்காவில் வசிக்கும் அன்புத் தோழியிடம், எப்போது இந்தியா வருகிறாய் என்று கேட்டால், உன் திருமணத்திற்க்கு வருகிறேன் தேதியை சொல்லு என்கிறாள்!

எல்லாருக்கும் பதிலாக ஒரு சிறு புன்னகை மட்டும்!!!!!!

Tuesday, 3 July 2007

உனக்கும் எனக்கும்



உன்னை எழுப்பிய சூரியன் தான்
என் பகலையும் எழுப்பிச் சென்றது

நீ கண்டு ரசித்த நிலவு தான்
என் வீட்டு ஜன்னலையும் எட்டிப் பார்த்துச் சென்றது

நீ எண்ண முயற்ச்சித்து தோற்றுப் போன நட்சத்திரங்களிடம் தான் நானும் தோற்றுப் போனேன்

உன்னை தினம் சுமக்கின்ற பூமி தான் என்னையும், என்னில் உள்ள உன்னையும் சேர்த்து சுமக்கின்றது

உனக்கு சுவாசம் கொடுத்த காற்று தான்
எனக்கும் கொடுத்துச் சென்றது

உன்னை தொட்டுச் சென்ற காதல் தான்
என்னையும் வருடிச் சென்றது

இவையனைத்தும் உனக்கும் எனக்கும் ஒன்றாய் இருக்க,
கல்யாணம் என்றதும் நீ மேல் சாதியானாய் நான் கீழ் சாதியானேன்!

Saturday, 19 May 2007

காதலே உயிர் கொடு

என் வீட்டு ரோஜா பூத்து சிரித்த போது,
நான் கொண்ட காதலை சொல்லவில்லையா!

என் வீட்டு மாடியில் மேகங்கள் செதுக்கிய
சிற்பங்கள் சொல்லவில்லையா நான் கொண்ட காதலை!!

நான் சுவாசித்து விட்டுச் சென்ற காற்று,
என் மூச்சில் நீ இருப்பதை உணர்த்தவில்லையா!!!

இயற்க்கையின் மொழி கொண்டு காதல் அனுப்பியுள்ளேன்,
பதில் கொடுத்து விரைவில் உயிர் கொடு!!!!

Wednesday, 2 May 2007

மெளனம் கலைத்த "மொழி"

வாழ்க்கையில எத்தனையோ பேர் வாழ பிடிக்காம
தற்கொலை பண்ணிட்டு செத்து போயிடராங்க, ஆனா
நீ ஒருத்தி தான் வாழ்க்கையே கொன்னுட்டு வாழ்ந்திட்டு இருக்க
................................................................

"வாழனும்கிற தவிப்பு உன் கண்ணுல தெரியுது, ஏன் மறைக்கிற
வாழ்ந்து தான் பாரேன்டீ, நிச்சயம் தோக்க மாட்ட........ "

வாழ்க்கையில சில விஷயங்கள கேள்வி கேக்காம நம்பி தான் ஆகனும்,
நீ எடுத்த முடிவு தப்புனு புரியும் போது அத திருத்திக்கிற
வாய்ப்பு கிடைக்காமலே போய்டலாம்.

இசையை எந்த அளவுக்கு நேசிச்சேனோ அந்த அளவுக்கு
உன் மெளனத்தையும் நேசிச்சேன்.

இதுக்கும் மேல நான் என்ன சொல்றது !!!!!!!

Monday, 2 April 2007

இன்னும் நம்புகிறேன்.............


காட்டாற்று வெள்ளம் தலை தடவிய போதும்
கரையேறி விடுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!

ஆசை என்னவோ ஆல விருட்சம் போல் என்றாலும்
ஒரு சின்ன விதையை இன்னும் நம்புகிறேன்!!

நேசித்து நேசித்து இழந்த நெஞ்சங்களை
மீண்டும் பெறுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!!