Tuesday, 18 September 2007
அனுப்பப் படாத கடிதங்களில் ஒன்று!
அன்புள்ள அம்மா,
உங்களை அம்மா என்று அழைப்பதா, இல்லை அத்தை என்று அழைப்பதா எனத் தெரியவில்லை, என்னவரின் அம்மா என்றாலும் நான் அம்மா என்றே அழைக்க விரும்புகிறேன். நானும் அவரும் சந்தித்துப் பழகி ஐந்து வருடங்கள் ஆன பிறகு இப்போது தான் உங்களுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதுவும் இந்த கடிதம் மூலம் மட்டுமே!
இப்படி ஒரு நேரத்தில் கடிதங்களுக்கே உரிய நலம் விசாரிப்பு என்பது வெறும் பேச்சுக்காக மட்டுமே இருக்க முடியும், நீங்கள் நலமாக இல்லை என்பதை நன்கு அறிந்த நிலையில், அதற்கு காரணமாக நான் இருப்பதை நினைத்தால் என் மன வேதனை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. வாழ்க்கையில் பல தருணங்களில் கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து தனி மனுஷியாக தன் பிள்ளைகளை வளர்த்து முன்னுக்கு கொண்டு வந்திருக்கும் உங்கள் நம்பிக்கையும் போராட்ட குணமும் ஆச்சரியப்படக் கூடியவை.
நிம்மதியாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில், எங்களுடைய காதல் எந்த அளவுக்கு உங்கள் அமைதியை குலைத்திருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. நீங்கள் என் மீது கொண்டுள்ள வெறுப்பும் கோபமும் எந்த அளவுக்கு நியாயம் என்பதையும் நான் புரிந்துக் கொள்ள தவறவில்லை. ஆனாலும் நான் என்னவரின் மீது கொண்டுள்ள காதலை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. நீங்கள் விரும்பும் மகளாக/மருமகளாக வாழ்ந்து காட்ட முடியும் நீங்கள் வாய்ப்பளித்தால், ஆனால் சாதிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், காதலுக்கும் சத்தியத்துக்கும் இல்லை என்ற கசப்பான உண்மைக்குக் காரணம் என் துரதிஷ்டம் என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை!
இருப்பினும் காலங்கள் மாறும், காதலை புரிந்து கொள்ளும் நல்ல நேரம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கத் தயாராகிறேன் உங்கள் சம்மதத்திற்க்காக. அதே சமயம் உங்களின் தற்காலிக மன வருத்தத்திற்க்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு இந்த வருத்தம் நிரந்தரம் அல்ல என்பதால் கொஞ்சம் நிம்மதியும் அடைய முடிகிறது!!
என்றும் அன்புடன்
உங்களின் மகளாக விரும்பும்
அன்பு மருமகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nice letter. Hope you will be happy soon
எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...
அன்புடன்
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
Post a Comment